அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கரோனா உறுதி செய்யப்பட்டு, பின்னர் மாரடைப்பு காரணமாகவோ அல்லது நுரையீரல் பாதிப்பாலோ உயிரிழந்தால், அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்று முடிவு வந்தால், அவரது உயிரிழப்புக்கு காரணம் கரோனா இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐசிஎம்ஆர் அதிகாரி, "ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம். ஆனால், அந்த மாரடைப்புக்கு நுரையீரல் செயலின்மை காரணமாக இருந்து, அந்த நுரையீரல் செயலின்மைக்கு கரோனா தொற்று காரணமாக இருந்தால், அந்த உயிரிழப்புக்குக் காரணம் கரோனாதான் என்று பதிவு செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், தமிழக சுகாதார அமைச்சரின் கருத்துக்கும் முரண்பாடு உள்ளது.
எனவே, ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி இறப்புச் சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.