போலி காசோலை மூலம் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.10 கோடி மோசடி செய்ய முயன்றதாக, கேரளாவைச் சேர்ந்தவர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்கு கடந்த 22-ம் தேதி கோவையைச் சேர்ந்த சாவித்ரி (40), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பானுமதி(44), கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்யூ (45) ஆகியோர் சென்றனர்.
அவர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனத்தின் ரூ.10 கோடி காசோலையை, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சேர வேண்டும் என வங்கியில் சமர்ப்பித்துள்ளனர்.
வங்கி மேலாளர் அந்த காசோலையை ஆய்வு செய்ததில், கையெழுத்து ஒத்துப்போகவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனத்துக்கு தொடர்புகொண்டார்.
2018-ல் சச்சின் என்பவருக்கு ரூ.8,737-க்காக வழங்கப்பட்ட கசோலை எண் என்பதும், போலி காசோலை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் அளித்தார். அதனடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸார், காசோலையைக் கொண்டுவந்த மூவரையும் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மேலும் 6 பேருக்கு இதில் தொடர்புடையது தெரியவந்தது. அவர்களையும் போலீஸார் வரவழைத்தனர். பின்னர் 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கோவை எஸ்ஐ-க்கு தொடர்பு
இந்த மோசடிக்கு கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உதவியாக இருந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.