தமிழகம்

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி

செய்திப்பிரிவு

திருத்தணி அருகே விவசாய கிணறுகளில் குளித்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது எஸ்.வி.கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த ரஜினி மகள் மதி(11), சேகர் மகள் ரோஜா(11), நாகராஜ் மகள் அம்சவேணி(11) ஆகிய 3 பேரும் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

விடுமுறை என்பதால் நேற்று தங்கள் வீடுகளுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 பேரும் மாலையில் எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துள்ளனர்.

நீச்சல் தெரியாத நிலையில், சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் மூவரும் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த சோளிங்கர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 சிறுமிகளையும் கிணற்றில் இருந்து சடலங்களாக மீட்டனர்.

சிறுவன் பலி

அதேபோல், ஆந்திர மாநிலப் பகுதியான பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரகாஷ்(12) என்பவர், ஆர்.கே.பேட்டை அருகே சாலையோரத்தில் இருந்த விவசாய கிணற்றில் குளித்தார்.

சடலங்கள் மீட்பு

அப்போது, டைவ் அடித்த அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுவரில் மோதி காயமடைந்து மயங்கிய நிலையில் நீரில் மூழ்கினார். சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் பிரகாஷை சடலமாக மீட்டனர். இவ்விரு சம்பவங்கள் குறித்தும், ஆர்.கே. பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT