சவுகார்பேட்டையில் நடந்த தீ விபத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அரசுத் துறையினருக்கு உணர்த்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவில் உள்ள ஒரு தனியார் குடோனில் திங்கள்கிழமை பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த 4 மாடிக் கட்டிடம் அமைந்துள்ள நாராயணா தெரு, பெரிய வாகனங்கள் நுழைய முடியாத, மக்கள் நெருக்கடி மிகுந்த தெருவாகும். தீயை அணைக்க வந்த வாகனங்கள் தெருவுக்குள் நுழைய முடியாமல் தவித்தன. இதனால் தீயின் உக்கிரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் விஜயசேகர், ‘தி இந்து’விடம் கூறுகையில், “தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பல பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகளை அனுப்பினோம். குறுகிய சந்தாக இருந்ததால், உள்ளே வாகனங்கள் நுழைய முடியவில்லை. அந்தக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள தெருவுக்குள் செல்லலாம் என்றால், அதுவும் குறுகலாக இருந்தது. எனவே, வாகனத்தை வெளியிலேயே நிறுத்திவிட்டு, தீயணைப்பு வீரர்களை மட்டும் நீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகளுடன் அனுப்பி வைத்தோம். எதிரில் உள்ள மற்றொரு கட்டிடத்தின் மீதிருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்’’ என்றார். “சவுகார்பேட்டையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத கட்டிடங்களுக்கு இதுவரை நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை” என்றும் விஜயசேகர் தெரிவித்தார்.
தி.நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான வி.எஸ்.ஜெயராமன் கூறியதாவது:
சென்னையில் நெருக்கடியான தெருக்களில் பன்னடுக்கு கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளாக சவுகார்பேட்டை, தியாகராய நகர் பகுதிகள் உள்ளன. பெரும்பாலான கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சியோ, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமோ உறுதியான முடிவை எடுக்காமல் உள்ளன. இதுபோன்ற தெருக்களில் தீ விபத்து ஏற்பட்டால் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சவுகார்பேட்டையில் உள்ள தெருக்களில் ஆபத்தான நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாது. இப்போது நடந்துள்ள தீ விபத்து, மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும். இனியாவது இதுபோன்ற தெருக்களில் பெரிய கட்டிடங்கள் பெருகுவதைத் தடுக்க வேண்டும். தீ தடுப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.