மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு அக்டோபர் 2-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'ஆஸாதி கா அம்ரித் மஹோத்ஸவ்' (சுதந்திரத்தின் மகா கொண்டாட்டம்) என்ற பெயரில் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதையொட்டி, ரயில்வே வாரியத்தால் அக்டோபர் 2-ம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.30 மணிக்கு குன்னூரை வந்தடையும். 12.55 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்படும் ரயில், மதியம் 2.25 மணிக்கு உதகை வந்தடையும்.
நான்கு பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் மொத்தம் 72 முதல் வகுப்பு இருக்கைகள் மற்றும் 100 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை முதல் வகுப்பு ரூ.1100, இரண்டாம் வகுப்பு ரூ.800, உதகை வரை முதல் வகுப்பு ரூ.1,450, இரண்டாம் வகுப்பு ரூ.1,050 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் இருந்து உதகை வரை முதல் வகுப்புக்கு ரூ.550, இரண்டாம் வகுப்புக்கு ரூ.450 என கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நடந்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.