தமிழகம்

மற்றவர்களைப் போல் நாங்கள் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை: திருமாவளவன்

செய்திப்பிரிவு

மற்றவர்களைப் போல் நாங்கள் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று மக்கள் நலக் கூட்டணி வழக்கறிஞர் மாநாடு நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம் மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:

மற்றவர்களைப் போல் நாங்கள் கூட்டணிக்காக பேரம் பேசவில்லை. 5 பேருக்கும் முரண்பாடு இருந்தாலும் உடன்பாடு ஏற்படக் காரணம் குறைந்தபட்ச செயல்திட்டம்.

ஊழல், மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சியை செயல்படுத்த ஒன்றுபட்டுள்ளோம்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

தேசத் துரோக குற்றச்சாட்டு பிரிவை இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீதிபதிகள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், இந்திய தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, "தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த செய்தி உண்மையாகும். ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்'' என்று வைகோ கூறினார்.

இது தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், ''வைகோவின் குற்றச்சாட்டு அபாண்டமானது. அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வழக்கறிஞர் மூலம் வைகோவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பினார். அதில், திமுக மீது வைகோ அவதூறான கருத்துகளை பரப்புவதாகவும், அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், திமுக மீது வைகோ கூறிய குற்றச்சாட்டை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

இது குறித்து வைகோ கூறுகையில், ''திமுக நோட்டீஸ் அனுப்பியதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நான் கூறிய கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை. தேமுதிக பேரம் பேசவில்லை. திமுகதான் பேரம் பேசியதாக நாளிதழில் வெளியானது'' என்றார்.

இதைத் தொடர்ந்து நெல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், ''நாளிதழில் வந்த செய்திக்காக வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியது தலைகுனிவானது. இதை சட்ட ரீதியாக வைகோ சந்திப்பார். வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கருணாநிதி திரும்பப் பெற வேண்டும்.'' என்றார்.

SCROLL FOR NEXT