விடுபட்டுப்போன 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ நடப்பாண்டில் வழங்கப்படும் என்று மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழ்மொழி வளர்ச்சிக்கு பணியாற்றும் வாய்ப்பை அளித்த மத்திய கல்வி அமைச்சகத்துக்கு நன்றி. தற்போது கீழடி,ஆதிச்சநல்லூர், கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் எழுத்துகளை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்மொழியின் தொன்மை, அம்மக்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தி புத்தகமாக வெளியிட செம்மொழி நிறுவனம் நடவடிக்கை மேற்கொள் ளும்’’ என்றார்.
மத்திய செம்மொழி நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் கூறும்போது,
‘‘செம்மொழி நிறுவனம் சார்பாகமுன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ முதல்முறையாக 2010-ம் ஆண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பின்லாந்து அறிஞருக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளாக இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இதுவரை வழங்கப்படாமல் இருந்த 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து, 10 அறிஞர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வுக் குழுவால்தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அறிஞர்களின் பட்டியலுக்கு தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விருது பெறும் அறிஞர்களின் பெயர்பட்டியலை முதல்வர் விரைவில்அறிவிப்பார். இனிவரும் காலங்களில் செம்மொழித் தமிழ் விருதுதொடர்ந்து வழங்கப்படும்’’ என்றார்.