லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்த வெங்கடாசலம் வீடு. 
தமிழகம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்; மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் சோதனை: 11 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் சொத்து ஆவணங்கள் சிக்கின

செய்திப்பிரிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் அலுவலகம், வீடு உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருப்பவர் வெங்கடாசலம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள அவரது அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு உட்பட சென்னையில் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் ரூ.2.5 கோடிமதிப்பிலான 6.5 கிலோ தங்கம், ரூ.13.50 லட்சம்ரொக்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், சொத்துஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற வெங்கடாசலம் கடந்த 2019-ம் ஆண்டுமாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகநியமிக்கப்பட்டார். இவர் அந்த பதவியை தவறாகபயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள், திட்டங்களுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளஅம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம், அதிமுக ஆட்சியின்போது பல்வேறு தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும்தொகையை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு இவர் ஒப்புதல் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சென்னை அம்பத்தூரில் இவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், லஞ்சப் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கான நிதியாகப் பெற்றதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT