பண மோசடி வழக்கில் வேப்பூர் ஒன்றிய திமுக செயலாளர் உட்பட 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிஉள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரிடம், மினி லாரி வாங்க வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.1.62 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கூறி, ரூ.1.62 லட்சத்தை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோகன்(62) பெற்றுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் வங்கிக் கடன் பெற்றுத்தராத அசோகன், வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 2000செப்டம்பரில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சின்னாறில்நடைபெற்ற பஞ்சாயத்தில் அசோகனுக்கு ஆதரவாக, சின்னாறைச் சேர்ந்த மதியழகன்(50) என்பவர் ஆஜராகி, அசோகன் வாங்கிய பணத்தை ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்றும், அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், தனது வீட்டை அடமானம் வைத்து, பணத்தை தருவதாகவும் உறுதியளித்து, பத்திரத்தில் எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகும் இருவரும் பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை.
இதையடுத்து, 2001-ம் ஆண்டு ராஜமாணிக்கம் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் அசோகன், மதியழகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வாரண்ட் பிறப்பித்த நீதிபதி
இந்த வழக்கு பெரம்பலூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதமும், மதியழகனுக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த தீர்ப்பின்படி மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் வழங்கும் வகையில், சிறை தண்டனையை அக்.21-ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாகவும், தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத மதியழகனுக்கு பிணையில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதியழகன் தற்போது வேப்பூர் (வடக்கு) ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.