தமிழகம்

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்- முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 24) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தென்மேற்குப் பருவமழைக்காலம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது.

ஏறத்தாழ 40 சதவீதத்துக்கும் மேல் மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், அதிக அளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

2015-ல் வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின. 2015 மற்றும் அதைத் தொடர்ந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களைக் கொண்டு, வெள்ள சேதத்தைத் தடுக்கவும், பருவமழையின்போது ஏற்படும் இயற்கை அழிவுகளைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்னரே கண்டறிந்து, அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தல், அதற்கான முகாம்களைத் தேர்வுசெய்து தயார் நிலையில் வைத்தல், முதல் நிலை மீட்பாளர்கள், பேரிடர் மேலாண்மைப் படையினருக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக அண்மையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் க.பனீந்திரரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்கின்றனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் முதல்வர் தக்க அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT