ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வார் ரூம் அமைத்து அழைப்பு எண்களை அறிவித்துள்ளது திமுக.
இது தொடர்பாக வெளியிடப்பட்டடுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகளுக்காக அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் (War Room) அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களிலிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை தலைமைக் கழகத்திடம் உடனுக்குடன் தெரிவிக்க விரும்பும் கழகத்தினர் பின்வரும் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்:
8838809244, 8838809285
மின்னஞ்சல்:
dmkcentraloffice@gmail.com
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இம்மாவட்டங்களுக்கு செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வந்தது.
இதனிடையே, இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 31-ம் தேதி வெளியிட்டது. மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.