ஈமு கோழி மோசடி வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் (49), திருப்பூர் ராமு காலனியைச் சேர்ந்த கார்த்திகேயன் (51) ஆகியோர் இணைந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில், ’ஓம் சக்தி ஈமு ஃபார்ம்ஸ்’ என்ற நிறுவனத்தை 2011-ம் ஆண்டு தொடங்கினர்.
பின்னர், இந்த நிறுவனத்தில் இரண்டு கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து, விளம்பரப்படுத்தினர். முதல் திட்டத்தில், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால், 6 முதல் 20 ஈமு கோழிக்குஞ்சுகளை அளித்து, அதற்கான தீவனம், கொட்டகை அமைத்துக் கொடுப்போம். செய்யும் முதலீட்டைப் பொறுத்து 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ரூ.10 ஆயிரம் வரை ஊக்கத்தொகை, ஆண்டுதோறும் போனஸாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அளிப்போம் என்று அறிவித்தனர்.
இரண்டாவது திட்டத்தில், ஈமு கோழிக்குஞ்சுகளை தாங்களே வளர்த்து மாதந்தோறும் ஊக்கத்தொகை, ஆண்டு போனஸ் ஆகியவற்றை அளிப்போம் என விளம்பரப்படுத்தினர். இதை நம்பி 16 முதலீட்டாளர்கள் ரூ.23.83 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி மாத ஊக்கத்தொகை, ஆண்டு போனஸ் எதையும் அளிக்கவில்லை. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் பண்ணைபட்டியைச் சேர்ந்த வெள்ளிமலை என்பவர் மாவட்டக் குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் அளித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், இந்த வழக்கு கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று (செப்.23) தீர்ப்பளித்தார். அதில், நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.27.50 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மற்றொரு வழக்கிலும் தண்டனை
எம்.எஸ்.குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரும் இதேபோல மோசடி திட்டங்களை அறிவித்து, மேலும் 25 பேரிடம் ரூ.58.51 லட்சம் மோசடி செய்தனர். இதில், பாதிக்கப்பட்ட திண்டுக்கல் கம்பளியம்பட்டி பொன்னம்மாள் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் நீதிபதி ஏ.எஸ்.ரவி, இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 55 லட்சம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மாணிக்கராஜ் ஆஜரானார்.