தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடன் தமிழ் அமைப்புகள் முன்வைத்தன.
தமிழ்க் குயில் இலக்கியக் கழகம், தமிழ் எழுச்சிப் பேரவை, பம்பப் படையூர் இராசராசன் வரலாற்று மையம், குடந்தை இராசராசன் பண்பாட்டு மையம், சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு, உத்ரா அறக்கட்டளை, தஞ்சைத் திருமூலர் தவமையம், குவைத், இலங்கை, கொரியா, பிரான்சு முதலிய நாடுகளின் தமிழ் அமைப்புகள், இலண்டன் பல்கலை தமிழ்த்துறை மீட்டுருவாக்கக் குழு ஆகியவற்றின் சார்பில் தமிழறிஞர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர்.
இதில், தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர், முனைவர் பா.இறையரசன் தலைமையில், ராசராசன் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பம்பைப் படையூர் எஸ்.கே.சீதரன், தமிழாய்வு மன்றம் தமிழ்ப் பேராசிரியர் பாரதிதாசன், இராசு மாசிலாமணி, எழுத்தாளர் அறிவழகன், இராசராசன் பண்பாட்டு மையம் கதிரவன், கார்த்திகேயன் முதலிய 7 பேர் பூம்புகார் அகழாய்வு, கீழடி அருங்காட்சியகம், அரசுப் பள்ளிகளில் பயின்றோர்க்கு முன்னுரிமை, தமிழில் கையொப்பம் முதலிய பல தமிழுக்கான நலம் தரும் அறிவிப்புகளுக்கு நன்றி கூறி, 20 கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுவும் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் விவரம்:
1.தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரவேண்டும்.
2. பழையாறையில் மங்கையர்க்கரசியார் விழா மீண்டும் நடத்த வேண்டும், உடையாளூர் இராசராசன் புதையிடத்தில் (சமாதியில்) மணிமண்டபம் கட்ட வேண்டும், திருப்புறம்பயம் போர்க்களமும் நடுகற் கோயில்களும் முதலிய சோழர் கால வரலாற்றிடங்கள் பாதுகாக்கப் பெறவேண்டும். இராசராசன் வரலாற்றைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பொன்னியின் செல்வன் பட காமிக்ஸ் பள்ளிகளில் பாடமாக்கப் பெறவேண்டும்.
3, சென்னை விமான நிலையத்தின் எதிரில் பல்லாவரம் மலைமேல் உலகின் முதல் கற்கோடரித் தொழிற்சாலை எனப் பலகை வைத்து, அடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
4. வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
5. இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் புத்துருவாக்கம் பெறத் தமிழக அரசு நிதி உதவி புரிய வேண்டும்.
என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகள் முதல்வரிடம் அளிக்கப் பெற்றன. ஆவன செய்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.