தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் 26-ம் தேதி முதல் பிரச்சாரம் தீவிரமடைய உள்ள நிலையில், கரோனா 3-வது அலையைத் தடுக்க உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டும் செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்திஇருந்தது. எனினும், இதை தமிழகத்தில் செயல்படுத்தவில்லை. கூட்டம் கூட்டமாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வேட்பாளர்கள் பலர் பிரச்சாரம் செய்தனர்.
விதிமீறல்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்புக் குழுக்கள், இதுபோன்றவிதிமீறல்களை தேர்தல் பார்வையாளர்களுக்கு அனுப்பவே இல்லை.
ஆனாலும், ‘‘தொற்று அதிகரித்ததற்கு தேர்தல் காரணமில்லை, தேர்தல் நடைபெறாத டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் தொற்று பரவுகிறது’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘‘தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவியதற்கு தேர்தல் ஆணையம்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலைக்குற்றம்கூட சுமத்த லாம்’’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 25-ம்தேதி வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுவதால், 26-ம்தேதி முதல் பிரச்சாரம் தீவிரமடைய உள்ளது.
பிரச்சாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை. வேட்பாளர் மட்டும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குச் சென்று, வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளது.
‘‘கடந்த தேர்தலைப் போலவே,கரோனா கட்டுப்பாடுகளை அரசியல் கட்சிகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யாமல் மாநில தேர்தல் ஆணையம் அலட்சியமாக இருந்துவிட்டால், அது கரோனா 3-ம் அலைக்கே வழி வகுக்கும்.ஏற்கெனவே, அக்டோபரில் கரோனா 3-வது அலை வரலாம் என பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரச்சாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறையும், மாநில தேர்தல் ஆணையமும் விதிக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை முயன்றும், மாநில தேர்தல் ஆணையத்திடம் பதில் பெற முடியவில்லை.
மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து, உரிய முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.