திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் வசித்துவந்தவர் பசுபதி பாண்டியன். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வீட்டில் இருந்தபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர் மீது, தாடிக் கொம்பு போலீஸார், கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு உதவியதாகக் கூறி, 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா (69).
இவர், நேற்று காலை திண்டுக்கல் அருகே இ.பி.காலனியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்குச் சென்றபோது சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரது தலையைத் துண்டித்து, சிறிது தூரத்தில் உள்ள பசுபதிபாண்டியன் கொலையான வீட்டின் முன்பு கொலையாளிகள் வைத்துச்சென்றனர்.
முன்னதாக, பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஆறுமுகசாமி, புறா மாடசாமி, பாட்ஷா, முத்துப்பாண்டி ஆகியோர் அடுத்தடுத்து பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்களால் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டனர். தற்போது ஐந்தாவதாக நிர்மலா கொலை செய்யப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமாரி, மாவட்டஎஸ்.பி., சீனிவாசன் ஆகியோர், நிர்மலா கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. தாடிக்கொம்பு போலீஸார் வழக்கை விசாரிக்கின்றனர்.