தமிழகம்

காந்தியின் எளிய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது மதுரை மண்: காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா பெருமிதம்

செய்திப்பிரிவு

காந்தியடிகளின் எளிய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது மதுரை மண் என்று அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

1921 செப். 22-ம் தேதி மதுரையில் மகாத்மா காந்தியடிகள் தனது மேலாடையைத் துறந்து வேட்டி, துண்டு மட்டுமே அணிந்து தனது ஆடைப் பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்து நேற்றுடன் நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அரை ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழா மதுரை காந்தி அருங்காட்சியகம் தலைமையில் நாடு முழுவதும் உள்ள காந்தியஇயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டன.

விழாவை முன்னிட்டு காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய மேலமாசி வீதியில் உள்ள நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு சர்வ சமயப் பிரார்த்தனை, கருத்தரங்கம், சிறப்புச் சொற்பொழிவுகள் நடந்தன. மேலும், சிறுவர்கள் காந்தி வேடமிட்டு ஊர்வலம் சென்றனர்.

கதர் விற்பனை நிலையத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு அரசு சார்பில் வணிகவரித் துறைஅமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், பூமிநாதன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காந்தி அருங்காட்சியகத்தில் மாலையில் நடந்த விழாவில் நூற்றாண்டு விழா சிறப்பு மலர்வெளியிடப்பட்டது. இதில் காந்தியடிகளின் பேத்தி தாரா காந்திபட்டாச்சார்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிபி.புகழேந்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், டெல்லி காந்தி அமைதி நிறுவனத் தலைவர் குமார் பிரசாந்த், டெல்லி மத்திய காந்தி நினைவு நிதிச் செயலாளர் சஞ்சய் சின்ஹா, வார்தா நையிதாலிம் சமிதி தலைவர் சுஹன் பரத், மதுரை காந்தி அருங்காட்சியகத் தலைவர் ம.மாணிக்கம், இயக்குநர் கேஆர்.நந்தாராவ், நிர்வாகக் குழு உறுப்பினர் டி.பாலசுந்தரம், தேசிய காந்தி அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அ.அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மக்களைப் பார்த்துத்தான் காந்தியடிகள் அரைஆடைக்கு மாறினார். அவரது ஆடைமாற்றத்துக்கான காரணமான மதுரை மண்ணுக்கு வந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்த மண்ணை நானும், எங்கள் குடும்பத்தினரும் நேசிக்கிறோம். இங்குள்ள மக்கள் மனதுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். இந்த மண்ணில் கால் வைத்ததும் சொந்தத் தாய் மண்ணில் நிற்பது போன்றஇனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.

காந்தியடிகளின் எளிய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது மதுரை மண்தான். இதை மறுக்க முடியாது. அவர் ஆடையை மாற்றிக்கொண்டு சன்னியாசம் செல்லவில்லை. எளிய மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

காந்தியின் தத்துவங்கள் இன்றுஉலக அமைதிக்கே வழிகாட்டுகின்றன. ஒட்டுமொத்த தேசமும் எங்கள் குடும்பத்தை நேசிப்பதால் குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பு இல்லாமலே வெளியே செல்கிறோம். எந்த பயமும் எங்களுக்கு இல்லை. கல்வி நமது நாட்டில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வழங்கப்படுகிறது. காந்தியின் கனவும் அதுதான். அதை நிறைவேற்றும் அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT