புதுச்சேரி மாநிலங்களவைக்கான தேர்தலில் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதால், காரைக்கால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒரு மக்களவை உறுப்பினரையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் கொண்டது. புதுச்சேரிக்கு அடுத்து பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் பெரிய பிராந்தியமாக காரைக்கால் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆட்சியின்போது, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் செய்யப்பட்டனர். இதில், காரைக்காலைச் சேர்ந்த யாரும் இல்லை. தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலிலும், பிரதான கட்சிகள் காரைக்காலைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தவில்லை.
தற்போது புதுச்சேரியில் பாஜக- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நியமன எம்எல்ஏக்களில் நிச்சயம் காரைக்காலைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுவும் பொய்த்துப் போனது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல்வர் என்.ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மாநிலங்களவை வேட்பாளாராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அதுவும் பொய்த்துப் போனது.
புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ செல்வகணபதி மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், காரைக்கால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக் குழு பொதுச் செயலாளர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு கூறியது: புதுச்சேரியை இதுவரை ஆண்ட அரசுகள் காரைக்காலை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன. காங்கிரஸை தொடர்ந்து பாஜகவும் காரைக்காலை புறக்கணித்து வருகிறது. 1990-க்குப் பிறகு காரைக்காலுக்கு நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் மாநிலங்களவை எம்.பியாக்கப்பட்டால் காரைக்காலுக்கு தேவையான பல திட்டங்களை கொண்டுவர முழுமூச்சுடன் செயல்பட முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்றார்.