ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் மூன்று ஆண்டுகளில் மருத்துவ செலவுக்கான வசதி இல்லாமல் இறந்தவர்களின் விகிதம் குறைந்திருக்கிறது என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனிநபர்கள் சுகாதாரப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காகவும் நோயாளிகள் பாதுகாப்பு வாரத்தை புதுச்சேரி சுகாதாரத்துறை செப்டம்பர் 17 முதல் 23 வரை கொண்டாடி வருகிறது.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காஜியாபாத் ஃபார்மகோ விஜிலன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை எற்பாடு செய்த நோயாளிகள் பாதுகாப்பு வார விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (செப். 22) கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் தமிழிசை பேசியதாவது:
"மக்கள் மனதில் மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்த எண்ணம் ஆழமாக பதிந்திருக்கிறது. அதனைப் போக்கும் விதமாக, மருந்துகளின் சரியான அளவு, அவற்றின் பக்கவிளைவுகள் குறித்து மருந்து வழங்கும்போதே தெளிவுப்படுத்த வேண்டும்.
நோயாளிகளின் வயது வரம்பு மற்றும் நோயின் தாக்கக்தைப் பொறுத்துத் துல்லியமான அளவுகளில் மருந்து வழங்கப்பட வேண்டும். மருந்து உட்கொள்ளும் பொழுது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறையைப் பரிந்துரை செய்ய வேண்டும்.
நோயாளிகளுக்கு அவரது நோயின் தாக்கம் மற்றும் மருந்தின் விளைவுகள் பற்றி சிறிது நேரம் ஒதுக்கி விளக்க வேண்டும். மருத்துவர்களும், செவிலியர்களும் மருந்துகளைப் பற்றிய அறிவை தொடர்ந்து சேகரித்துக் கொள்ள வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் தான் உலகிலேயே மிகப்பெரிய இலவச மருத்துவக் காப்பீடு திட்டம்.
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகக் கருதி கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் பயனாக கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவ செலவுக்கான வசதி இல்லாமல் இறந்தவர்களின் விகிதம் குறைந்திருக்கிறது.
ஆகவே, இந்த திட்டத்தினை மேம்படுத்தி தகுதியுடைய அனைவரையும் பதிவு செய்ய சுகாதாரத்துறை உரிய முயற்சி எடுக்க வேண்டும்".
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
விழாவில், சுகாதாரத்தறைச் செயலாளர் அருண், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அனந்தலட்சுமி மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.