தமிழகம்

புதுச்சேரி வளர்ச்சிக்காகவே மாநிலங்களவை  தேர்தலில் போட்டி: பாஜக

அ.முன்னடியான்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும், 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நீடிக்கும் என புதுச்சேரி மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று(செப். 22) செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிடுகிறோம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை நடத்தி பாஜக போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் 3 சுயேச்சை எம்ல்ஏக்கள் ஆதரவு அளிக்கின்றனர். இதற்காக முதல்வர் ரங்கசாமிக்கும், எம்எல்ஏக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தேசிய தலைவர் நட்டாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுச்சேரி வளர்ச்சிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி முக்கியமான ஒன்று. அதனைக் கருத்தில் கொண்டு பாஜக போட்டியிடுகிறது. இப்பதவிக்குத் தகுந்த நபர் செல்வகணபதி. அவர் வரும் நாட்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு இணைக்கமாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரி அரசின் செயல்பாடுகளுக்கும், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும் செல்வகணபதி உறுதுணையாக இருப்பார்.

சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு அமைந்தால் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு நல்லது என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கு தகுந்தாற்போல் மக்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். அந்த நம்பிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி பூர்த்தி செய்யும். ‘பெஸ்ட்’ புதுச்சேரி என ஏற்கெனவே பிரதமர் அறிவித்துள்ளார். அதனைப் பின்பற்றி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்’’ என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘எப்போதுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதுதான் பாஜகவின் விருப்பம். எங்கு போட்டியிடுவது என்பது தொடர்பாகப் பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தொடர்ந்து 5 ஆண்டுகள் எங்கள் கூட்டணி நீடிக்கும்’’என்று தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்த கேள்விக்கு, ‘‘புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக முதல்வரின் நிலைப்பாடுதான் எங்களது நிலைப்பாடு. அவரது முடிவிற்கு நாங்கள் துணை நிற்போம். மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்’’ என்று நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநில பாஜக தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT