டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும், 'மீனவ தந்தை' கே.ஆர் செல்வராஜ், குமார் மீனவர் நலச் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் தியாகராஜன் வழக்குத் தொடர்ந்தனர்.
அதேபோல, வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதைத் தமிழில் வெளியிட்டால்தான், தமிழக மக்களால் ஆட்சேபங்களைத் தெரிவிக்க முடியும் என்பதால், தமிழில் வெளியிட வேண்டும் எனவும், அதன் மீது கருத்துகளைத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப். 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும், அது தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
வரைவு அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கருத்துக் கேட்பு விரிவாக நடத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.