காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே வெடி வெடித்துக் கொண்டாடிய காங்கிரஸார் | படம்: எம்.சாம்ராஜ். 
தமிழகம்

கட்சி மாறிய முன்னாள் அமைச்சருக்கு எம்.பி. சீட் கிடைக்காததால் வெடி வெடித்துக் கொண்டாடிய காங்கிரஸார்

செ. ஞானபிரகாஷ்

காங்கிரஸிலிருந்து என்.ஆர்.காங்கிரஸுக்கு மாறிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எம்.பி. சீட் கிடைக்காததால், புதுச்சேரி காங்கிரஸார் வெடி வெடித்துக் கொண்டாடினர்.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தார் ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ். இவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தார். 25 ஆண்டுகள் எம்எல்ஏ பதவியில் இருந்ததற்காக சட்டப்பேரவையில் அவரை கவுரவிக்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது. ஆனால், 25 ஆண்டுகள் அவர் எம்எல்ஏவாக இல்லை என்ற சர்ச்சையும் அப்போது எழுந்தது. ஆட்சி நிறைவுக் காலத்தில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடாமல் ரங்கசாமியைப் போட்டியிட வைத்தார். ஆனால், ரங்கசாமி சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். தட்டாஞ்சாவடி தொகுதியில் வென்று ரங்கசாமி முதல்வராக ஆனார். அதையடுத்து மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெற மல்லாடி கிருஷ்ணாராவ் காய் நகர்த்தினார். அப்பதவியைத் தர முதல்வர் ரங்கசாமியும் சம்மதம் தெரிவித்தார்.

இதனால் கடந்த பல மாதங்களாகப் புதுச்சேரி அரசியலில் முக்கிய இடத்தில் மல்லாடி கிருஷ்ணாராவ் வலம் வந்தார். இந்நிலையில் அண்மையில் திருப்பதி கோயில் தேவஸ்தான கமிட்டி உறுப்பினராக மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியேற்றுக் கொண்டார். அடுத்து எம்.பி.யாகிவிடுவோம் என்று நினைத்திருந்தார்.

ஏனாமில் சுயேச்சையாக வென்ற கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அத்துடன் என்.ஆர்.காங்கிரஸிலும் பலர் மல்லாடி கிருஷ்ணாராவை எம்.பி.யாக்க விரும்பவில்லை. இறுதிக் கட்டத்தில் எம்.பி. சீட் பாஜக வசம் சென்றது. பாஜக வேட்பாளர் செல்வகணபதி மனுத்தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸார் வெடி வெடித்துக் கொண்டாடினர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு, "மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனிடம் அனுமதி பெற்றுத்தான் வெடி வெடித்துக் கொண்டாடுகிறோம். காங்கிரஸிலிருந்து கட்சி மாறிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எம்.பி. சீட் கிடைக்காததற்குத்தான் வெடி வெடிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT