ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

பாமக நிர்வாகி மரணம்; கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளைக் கைது செய்க: ராமதாஸ்

செய்திப்பிரிவு

பாமக நிர்வாகி மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளர் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த வழக்கில், முறையாக விசாரணை நடத்தாமல் எதிரிகளைத் தப்பிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும், கோவிந்தராசு கொலை தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.ஆர்.வி.ரமேஷ் மீதான புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி வருகிறார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 22) தன் ட்விட்டர் பக்கத்தில், "பண்ருட்டி மேல்மாம்பட்டு பாமக நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூறாய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது!

உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலிப் பதிவு செய்ய வேண்டும், மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நடந்தது கொலைதான் என்பதற்கான குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யாமல், சந்தேக மரணம் எனப் பதிவு செய்திருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன் பிறகாவது கொலை வழக்காக மாற்றி எதிரிகள் கைது செய்யப்படுவரா?" என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT