செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜி.ராமகிருஷ்ணன். 
தமிழகம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பானது, வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அவர் இன்று (செப். 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வரும் 27-ம் தேதி, அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டமானது 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைவாக உள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.42-க்கு விற்க முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ள போதிலும், மத்திய அரசு கலால் வரியை ரத்து செய்யாததன் காரணத்தால், ரூ.100-ஐத் தொட்டுவிட்டது.

பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களும் விலையேற்றமடைய வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியும், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு, மத்திய கால கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் விட்டுவிட்டது. எனவே, திமுக அரசு இந்த மத்திய கால கடனை ரத்து செய்ய வேண்டும். கரோனா நெருக்கடி காரணமாக, தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களை எதிர்காலத்திலும் அரசுப் பள்ளியிலேயே தக்கவைக்கின்ற அளவுக்கு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிமுக ஆதரித்தது வரவேற்கத்தக்கது. இதுதவிர மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்து பாஜகவுக்கு அதிமுக ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. அவர்களது அரசியல் நிலைப்பாட்டைத் தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதைக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலே அனைவருக்கும் உணர்த்திவிட்டது.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்த திமுக, வெற்றி பெற்றுள்ளபோதும் குறைவான இடங்களிலேயே கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றிருப்பது குறித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

மத்திய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான செயல்பாடுகளால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒருமித்துச் செயல்படத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாக, கடந்த 20-ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை 19 கட்சிகள் இணைந்து நடத்தியுள்ளன. இந்த ஒற்றுமை வருகின்ற 2024ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்".

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நகரச் செயலாளர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT