குரு என்கிற குருசாமி. 
தமிழகம்

கவர்ச்சி திட்டங்களால் ரூ.2.39 கோடி மோசடி: ஈமு கோழி குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை

க.சக்திவேல்

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.2.39 கோடி மோசடியில் ஈடுபட்ட சுசி ஈமு ஃபார்ம்ஸ் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் எம்.எஸ்.குரு என்கிற எம்.குருசாமி (40). இவர், கடந்த 2010-ம் ஆண்டு பெருந்துறையில் 'சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கவர்ச்சிகரமான இரண்டு திட்டங்களை விளம்பரப்படுத்தினார். முதல் திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழிக் குஞ்சுகளை அளித்து, தீவனம், கொட்டகை அமைத்துக் கொடுத்து, பராமரிப்புத் தொகையாக 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், ஆண்டு போனஸாக ரூ.20 ஆயிரம் அளிக்கப்படும். இரண்டு ஆண்டுகள் கழித்து, கட்டிய முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஈமு கோழிக் குஞ்சுகளை நிறுவனமே வைத்துப் பராமரிக்கும். 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். ஆண்டு போனஸாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் கழித்து, கட்டிய முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும் என விளம்பரப்படுத்தினர். இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர், மொத்தம் ரூ.2.39 கோடி முதலீடு செய்தனர்.

அதன்பிறகு, வாக்குறுதி அளித்தபடி ஊக்கத்தொகை, போனஸ் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாமக்கல், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குருசாமி உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று (செப்.22) தீர்ப்பளித்தார்.

அதில், மோசடி செய்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2.40 கோடி அபராதம் விதித்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 7 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT