ஜோர்டான் நாட்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் சீனியர் கூடைப்பந்து அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (FIBA) சார்பில் ஜோர்டான் நாட்டில் செப்.27 முதல் அக்.3-ம் தேதி வரை ஆசிய கோப்பைக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்றுஉள்ள 12 பேர் கொண்ட மகளிர் சீனியர் கூடைப்பந்து அணியில், தமிழகத்திலிருந்து முதல்முறையாக ஒரே நேரத்தில் 3 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் புஷ்பா, சத்யா ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தையும், நிஷாந்தி சென்னையையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் சகோதரிகளான புஷ்பா, சத்யாஆகியோர் மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜீவ் காந்தி சிறப்பு விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்த மையத்தின் கூடைப்பந்து பயிற்சியாளர் பி.மணிவாசகன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
புஷ்பா கடந்த 5 ஆண்டுகளாகவும், சத்யா 3 ஆண்டுகளாகவும் இங்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். இவர்களில் புஷ்பா தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். 2018-ல் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் அணிக்கு தலைமையேற்றுள்ளார்.
சகோதரிகள் இருவருமே மிகவும் திறமைசாலிகள். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும், ஈடுபாட்டோடும் களத்தில் விளையாடக் கூடியவர்கள். தனித்தனியாக பல்வேறு போட்டிகளில் இருவரும் விளையாடியிருந்தாலும், முதன்முறையாக இருவரும் ஒரே அணியில் தற்போது விளையாட உள்ளனர். இவர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியினர் நிச்சயம் ஆசிய கோப்பையைவென்று உலக அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்றார்.
சத்யா, புஷ்பா ஆகியோரின் தாயார் மஞ்சுளா கூறியது: மயிலாடுதுறை மாவட்டம் முடிகண்டநல்லூர் எங்களது சொந்த ஊர். எனது கணவர் செந்தில்குமார் விவசாயி. 2012-ல் இறந்துவிட்டார் மிகவும் ஏழ்மை நிலையில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்தேன். விளையாட்டில் இருவருக்கும் உள்ள ஆர்வத்தால் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்தேன். இப்போது அவர்கள் இருவரும் சாதனை படைத்து வருகின்றனர்.
இருவருக்கும் ரயில்வேதுறையில் வேலை கிடைத்துள்ளது. தந்தை இல்லாத நிலையிலும் இருவரையும் நல்ல முறையில் வளர்த்துள்ளேன் என்ற பெருமிதம் எனக்கு உள்ளது. உடல்நிலை காரணமாக நான் வேலைக்குச் செல்வதில்லை என்றார்.