பல்வேறு பொதுப் பயன்பாட்டு சேவைகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் அன்றாடம் நாம் பயன்படுத்துகிறோம். இந்தசேவைகளில் பல்வேறு குறைகள்,பிரச்சினைகளை எதிர்கொண்டிருப் போம். இதுபோன்ற பிரச்சினை களில் மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு கிடைக்க வேண் டும் என்பதைக் கருத்தில்கொண்டு, நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய ஏற்பாடாக ‘நிரந்தர மக்கள் நீதிமன்றம்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர், இதன் தலைவராக இருப்பார். பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய பிரச்சினைகளுக்கு, இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுகிறது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர்கள் கூறியதாவது: பயணிகள் விமானம், சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சரக்கு போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தொலைபேசி சேவைகள், எந்தவொரு நிறுவனத்தாலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், நீர் வழங்கும் சேவை, மருத்துவமனை, மருந்தகத்தின் சேவை, காப்பீட்டு சேவைகள், கல்வி அல்லது கல்வி நிறுவனங்களின் சேவை, வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை ஆகியவை சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தின்படி பொதுப் பயன்பாட்டு சேவைகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய, மாநில அரசின் அறிவிப்பின் மூலம் அவ்வப்போது சேர்க்கப்படும் மற்ற சேவைகள் தொடர்பாகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்.
கட்டணம் தேவையில்லை
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது மிகவும் எளிது. நீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண காகிதத்தில், யார் புகார் அளிக்கிறார்களோ அவரது விவரத்தை அனுப்புநராகவும், பெறுநராக ‘மாவட்ட நீதிபதி, நிரந்தர மக்கள் நீதிமன்றம், கோவை’ என்பதை குறிப்பிட்டும், உரிய ஆதாரங்களை இணைத்து புகார் அளித்தால் போதுமானது. தொடர்புடைய எதிர்தரப்பினரை அழைத்து விசாரித்து, விரைவில் உரிய தீர்வு காணப்படும். ரூ.1 கோடி மதிப்புள்ள தீர்வுகளுக்கான மனுக்கள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பாணைக்குச் சமமானது. இந்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.
கடுமையான நடைமுறைகள் இன்றி, எளிய மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.