தமிழகம்

திருப்பூர் ஆவின் ஜங்ஷன் விற்பனையகத்தில் அலங்கார வளைவில் அந்தரத்தில் தொங்கும் டைல்ஸ் கற்கள்: அசம்பாவிதம் ஏற்படும் முன் விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் ஆவின் ஜங்ஷன் நுழைவுப் பகுதியில் உள்ள அலங்கார வளைவில், அந்தரத்தில் தொங்கும் டைல்ஸ் கற்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே இயங்கிவரும் ஆவின் ஜங்ஷன் விற்பனையகத்தில் பால், நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், பால்பேடா, பால்பவுடர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதே வளாகத்தில், குழந்தைகளுக்கான பூங்காவும் இருப்பதால், நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்துக்கான 2 நுழைவாயில்களிலும் 25 அடி உயரத்தில் டைல்ஸ்கற்கள் கொண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருநுழைவாயிலில் உள்ள வளைவில் டைல்ஸ் கற்கள் உடைந்து, அந்தரத்தில் தொங்குவதோடு எந்நேரமும் விழும் அபாய நிலையிலும் உள்ளன. சேதமடைந்த டைல்ஸ் கல்லை கயிறு கட்டி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: திருப்பூர் நகரின் பிரதான பகுதியான பல்லடம் சாலையில், ஆவின் ஜங்ஷன்அமைந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில்,டைல்ஸ் கற்கள் உடைந்து பல மாதங்களாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. எந்நேரமும் விழும் அபாயம் இருப்பதால், தொடர்புடைய ஒரு நுழைவாயில் பகுதிக்கான பாதையை ஆவின் நிர்வாகத்தினர் அடைத்துள்ளனர். எனினும், இதனருகிலேயே இயங்கிவரும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் மக்கள், ஆபத்தான நுழைவாயிலில் ஒதுங்கி நிற்கின்றனர். ஏற்கெனவே கயிறு கட்டி வைக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் உடைந்து, நொறுங்கிக் கிடக்கின்றன. மேலும் விற்பனை விவரம் அடங்கிய பதாகை பல மாதங்களாக கிழிந்து, பயனற்று கிடக்கிறது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டைல்ஸ் கற்களை அகற்றுவதோடு, விற்பனை விவரம் அடங்கிய பதாகையையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் ஆவின் ஜங்ஷன் நிர்வாகத்தினர் கூறும்போது ‘‘சென்னையில் இருந்து ஆவின் பொருட்களை ஏற்றிவந்த வாகனம் மோதியதில் வளைவில் இருந்த டைல்ஸ் கற்கள் உடைந்துவிட்டன. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT