தமிழகம்

பிரபல விஞ்ஞானிகள் பங்கேற்கும் பொதுமக்களுக்கான அறிவியல் சொற்பொழிவு: சென்னையில் 14-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சென்னை கணிதவியல் நிறுவனம் சார்பில் பிரபல விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கான அறிவியல் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் பிப்ரவரி 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளது. வயது, படிப்பு பாகுபாடு இன்றி அறிவியலில் ஆர்வம் உள்ள அனைவருக்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல விஞ்ஞானிகள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். ஐதராபாதில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ரமா கோவிந்தராஜன், பருவநிலை மாற்றம் குறித்தும், சென்னை கணிதவியல் நிறுவன பேராசிரியை மீனா மகாஜன், கணினி வளர்ச்சி குறித்தும், மற்றொரு பேராசிரியை இந்துமதி, சூரியன் எவ்வாறு ஒளிர்கிறது? என்ற தலைப்பிலும், பெங்களூரு தேசிய உயிரியல் மைய விஞ்ஞானி சஞ்சய் சேன், பூச்சிகள் எப்படி பறக்கின்றன? என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். இந்த அறிவியல் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் http://www.imsc.res.in/triveni என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு சென்னை கணிதவியல் நிறுவன பேராசிரியர்கள் கவுதம் மேனன், கே.என்.ராகவன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT