மக்காச்சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் நாட்டிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 486 கோடி குறுகிய கால பயிர்க்கடனாக வழங்கப் பட்டுள்ளது. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் தினமும் 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக பால் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறைக்கு 2010-11-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 72 கோடியே 43 லட்சமாக இருந்த நிதி ஒதுக்கீட்டை, 2015-16-ம் ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 503 கோடியே 40 லட்சமாக இந்த அரசு உயர்த்தியுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.123 கோடியும், பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடியும் உட்பட வேளாண்மைத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் மொத்தமாக ரூ.6 ஆயிரத்து 938 கோடியே 57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்கடன்
2011-12-ம் ஆண்டில் இருந்து இதுவரை குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.22 ஆயிரத்து 486 கோடியை விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கியுள்ளன. கடன்களை தவணை தவறாது திரும்பச் செலுத்துவதை ஊக்குவிக்க, வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்க வட்டி மானியமாக 2011-12-ம் ஆண்டில் இருந்து ரூ.755 கோடியே 23 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
7 லட்சம் பெண்களுக்கு
கடந்த 5 ஆண்டுகளில் 25 மாவட்டங்களில் ரூ.97 கோடியே 35 லட்சத்தில் 3 ஆயிரத்து 14 பிராய்லர் கோழிப் பண்ணைகள், 10 ஆயிரத்து 195 நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க அரசு உதவியுள்ளது. விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.231.11 கோடி செலவில் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு 60 ஆயிரம் கறவைப் பசுக்கள், ரூ.927 கோடியே 75 லட்சத்தில் 7 லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 70 ஆயிரத்து 994 பசுங்கன்றுகளையும், 42 லட்சத்து 95 ஆயிரம் ஆட்டுக் குட்டிகளையும் கூடுதல் சொத்தாக பயனாளிகள் பெற்றுள்ளனர். தினமும் 2 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கி இந்த அரசு சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.