மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் லட்சுமண் சாய் மற்றும் அவன் குடித்த குளிர்பானம். 
தமிழகம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி: கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

செய்திப்பிரிவு

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர் செந்தில். இவரது மகன் லட்சுமண் சாய் (8). செந்திலின் தங்கை மகன் ஓமேஸ்வரன்(6). சிறுவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடையில் ரூ.10-க்கு குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த அவர்கள் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்துள்ளனர். அப்போது,சிறுவர்களிடம் ரசாயன நெடியும் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் அபாய கட்டத்தை கடந்து நலமாக உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் குளிர்பானம் வாங்கிய மளிகைக் கடை உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் குடித்த குளிர்பான பாட்டிலை ஆய்வுக்காக எடுத்து வைத்துள்ளனர்.

குளிர்பானம் விற்ற கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தின் மாதிரிகளை எடுத்து சோதனைக்காக கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பினர். சிறுவர்களின் ரத்த மாதிரிகளை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

சிறுவர்கள் குடித்த ‘மெரிபா’ என்ற குளிர்பான நிறுவனம் கிருஷ்ணகிரியில் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி ஹெராஹள்ளி பொத்தாபுரம் தாலுகாவில் உள்ள குளிர்பான உற்பத்தி ஆலையில், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் குறைந்த விலையிலான குளிர்பானங்கள், அதாவது ரூ.10-க்கு ஏராளமான லோக்கல் தயாரிப்பு குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. இவற்றுக்கு எந்த தரச் சான்றிதழும் கிடையாது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுப்பதும் இல்லை. அதிகாரிகள் சோதனை நடத்தி, தரச் சான்று இல்லாத குளிர்பானங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதை விற்பவர்கள், தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை பெசன்ட் நகரில் கடந்த மாதம் தரணி (13) என்ற சிறுமி குளிர்பானம் குடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மளிகை கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு விற்பனை செய்யப்படாமல் இருந்த மற்ற குளிர்பானங்களையும் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

SCROLL FOR NEXT