தமிழகம்

‘நமக்கு நாமே பயணத்தால் ஆணவம் இல்லை’

செய்திப்பிரிவு

ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் நேற்று நடந்த ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயண நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ‘நமக்கு நாமே’ பயணத்தை வெற்றிகரமாக நடத்தியதால் எனக்கு ஆணவம் வரவில்லை; பெருமை ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தகட்டமாக மக்கள் நலப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து பேசவுள்ளோம்.

இந்த ஆட்சியின் முடிவுக்காக நாட்களை எண்ணிக்கொண்டு வருகிறோம். மே மூன்றாவது வாரத்தில் தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சி ஏற்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டம்

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “2011 சட்டப்பேரவை தேர்தலுக்காக வெளியிட்ட திமுக தேர்தல் அறிக் கையின் 19-ம் பக்கத்தில், பவானி ஆற்றில் உள்ள உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயப் பணிகளுக்குப் பயனுறும் வகையிலும் அத்திக்கடவு- அவிநாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அந்த வாக்குறுதிப்படி, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

SCROLL FOR NEXT