தமிழகம்

தீவிரவாதிகள் போல ஊடுருவிய 12 பேர் ஆம்லா ஒத்திகையில் சிக்கினர்

செய்திப்பிரிவு

சென்னையில் நடந்த ‘ஆம்லா' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள்போல ஊடுருவிய 12 பேரை காவல்துறையினர் பிடித்தனர்.

'ஆம்லா' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. தீவிரவாதிகள்போல ஆயுதங்களுடன் வரும் போலீஸாரை அடையாளம் கண்டுபிடித்து பிடிப்பதே இந்த ஒத்திகையின் நோக்கம். மும்பையில் 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160-க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வப்போது 'ஆம்லா' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 9 முறை இதேபோன்ற ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த பாதுகாப்பு ஒத்திகை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையிலும் காவல்துறை யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் முறையாக தமிழக போலீஸாருடன் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலபோலீஸாரும் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள் ளனர். மத்திய பாதுகாப்பு படையினர், சாலையின் நடுவில் புதிதாக தடுப்பு வேலிகளை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பலத்த சோதனை நடத்தப்பட்டது. வழக்கத்தைவிட கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன சோதனை தீவிர மாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கடலோர பகுதி களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் போல ஊடுருவிய கடலோர காவல் படையினர் 3 பேரை கொட்டிவாக்கத்தில் போலீஸார் பிடித்தனர். இதே போல காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் 6 பேரையும், சென்னை பல்கலைக்கழகம் அருகே 3 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். வியாழக்கிழமை மாலை 6 மணி வரை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப் படுகிறது.

SCROLL FOR NEXT