தமிழகம்

சென்னையில் இன்று இளையராஜா ஆயிரம் நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவப்படுத்தும் விதமாக ‘இளையராஜா ஆயிரம்’ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

1976-ல் ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இளையராஜா கடந்த 40 ஆண்டுகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாலாவின் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘தாரை தப்பட்டை’ அவரது ஆயிரமாவது படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் இளையராஜா, ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ எனும் ஆங்கிலப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

அவரை கவுரவப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை ’இளையராஜா ஆயிரம்’ என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. இளையராஜா மியூசிக் அண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் டிவியும் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சித்ரா, உஷா உதுப், மனோ, கார்த்திக், தேவி பிரசாத் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இளையராஜாவின் குருவும் மிருதங்க இசைக் கலைஞருமான டி.வி. கோபாலகிருஷ்ணன், வயலின் மேதை எல். சுப்பிரமணியம், கிட்டாரிஸ்ட் பிரசன்னா, தவில் இசைக் கலைஞர் விக்கு விநாயக்ராம் போன்றோரும் இந்த இசைவிழாவில் கலந்துகொள்கிறார்கள். மேலும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

SCROLL FOR NEXT