தமிழகம்

மருத்துவ தேர்வு முறையை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவால் சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்தம் - தற்போதைய நிலை தொடர வேண்டும்

செய்திப்பிரிவு

உதவி மருத்துவ அதிகாரி, விரிவுரையாளர் பணிக்கான தேர்வு முறை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அரசூரை சேர்ந்த ஜெ.பெரியார்செல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை 2007-ம் ஆண்டு முடித்தேன். பின்னர், உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி, விரிவுரையாளர் நிலை-2 பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மருத்துவப் பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. நான் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

சான்றிதழ் சரிபார்ப்பு

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யாமல் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இதனால், என்னைவிட இளையவர்கள் பலரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர். இந்த தேர்வு முறை சட்டவிரோதமானது.

எனவே, இப்பணிகளுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளக்கூடாது என்று மருத்துவப் பணி தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ‘‘உதவி மருத்துவ அதிகாரி, விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடவடிக்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்’’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT