திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் திருவிழா கிராமங்களில் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. சுவர் விளம்பரங்கள் செய்வதில் வேட் பாளர்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டுகளில் போட்டியிட ஏராளமான சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகள் தங்களுடைய அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை இறுதிகட்டத் தில்தான் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சின்னங்கள் இதுவரை ஒதுக்கப்படாத நிலை யிலும், கிராமப்புறங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வதில் வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. பல இடங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் இல்லாமல் இந்த விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
2,069 பதவிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 2,069 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஒருவரே நான்கு பேருக்கு வாக்களிக்க வேண்டியது இருப்பதினால், அவர்களது மனதில் வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பதிவு செய்வதற்காக வேட்பாளர்கள் பல உத்திகளை கையாள்கிறார்கள். அதில் முக்கியமானவை கிராமப்புறங்களில் செய்யப்படும் சுவர் விளம்பரங்கள்.
இதற்காக தேர்தல் தேதி அறிவித்த உடனேயே அரசியல் கட்சியினர் சுவர்களை பிடிக்கும் வேலையில் இறங்கிவிட்டனர். வெள்ளையடித்து கட்சியின் பெயர்களை மட்டும் எழுதி வைத்துள்ளனர். அதிகாரப் பூர்வ வேட்பாளர்கள், சின்னங்கள் ஒதுக்கீட்டுக்கு பின் அவற்றை அதில் எழுதுவார்கள். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சைகள், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரும் சுவர் விளம்பரங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். கிராமப்புறங்களில் கட்டிட உரிமையாளர்களின் அனுமதியுடன் தேர்தல் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.
பிரச்சாரத்துக்கு உதவி
“கடந்தகால தேர்தலின்போது சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கு அரசு அதிகாரிகள் கடுமையான கெடுபிடிகள் செய்தனர். ஆனால், இந்தமுறை அவைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டதினால் அதிகளவில் சுவர் விளம்பரங்களை விரைவாக எழுதி முடிக்க முடிகிறது . பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும்தான் தங்களது பிரச்சாரத்துக்கு உதவுகின்றன” என்று, அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதுபோல் “தேர்தல் வந்தால் தான் கிராமப்புறங்களில் தங்களுக்கு வேலை கிடைக்கும்” என்று, சுவர் விளம்பரங்களை எழுதும் ஓவியர்கள் தெரிவித்தனர்.