தமிழகம்

கோவில்பட்டி புதிய பாலம் பகுதியில் சாலைப்பணி தாமதத்தால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் உள்ள எட்டயபுரம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இருபுறமும் சாலைப்பணிகள் நடைபெறாமல் ஜல்லிக் கற்கள் நிறைந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவக்குடி - கோவில்பட்டி - எட்டயபுரம் வேம்பார் சாலை விரிவாக்கப் பணியையொட்டி, கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே6 மீட்டர் அகலம் உள்ள ஓடைப்பாலத்தை 15 மீட்டர் அகலமுடைய பாலமாக விரிவாக்கம் செய்யும் பணி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கடந்தஜூலை 19-ம் தேதி தொடங்கியது.

இப்பணிகளுடன் சாலையின் கிழக்கு பகுதியில் 100 மீட்டர், மேற்குபகுதியில் 80 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை அமைக்கும் பணிரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்பணிகளுக்காக எட்டயபுரம் சாலையில் வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தன. பாலப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி முதல் வாகனப் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க பழைய சாலை பெயர்க்கப்பட்டு, ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. பின்னர் தார்ச்சாலை அமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் செல்லும் போது, அப்பகுதி புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.

மேலும், சல்லி கற்களால் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாலத்தின் இருபுறமும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. நிரந்தரமாக தார்ச்சாலை அமைப்பதற்கு ஏதுவாக தற்போது ஜல்லிக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் பணி முழுவதும் முடிவடைந்து தார்ச்சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT