நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப். 21) சென்னை வானகரத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிமுலேஷன் மையத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"நீதிபதி ஏ.கே.ராஜன் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். நீட் தேர்வு என்பது அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி என்பது 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்று, அதனால்தான் தமிழக முதல்வர் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகிறார்கள் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 85 ஆயிரம் பேர் நீட் தேர்வால் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதில்தான் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளைத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர், மருத்துவம் பயில்வதற்கு சேர்க்கை விகிதங்கள் குறைவு என்பதற்கு பல்வேறுக் காரணங்களை எடுத்துச்சொல்லலாம். அந்த சதவிகிதத்தைக் கூடுதலாக்குவதற்குத்தான் தமிழக முதல்வர் அண்மையில் சட்டப்பேரவையில் தொழிற்கல்வி பயில்கிற மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு என்கிற சிறப்பானத் திட்டத்தை அறிவித்து, நேற்றைக்கு தொழிற்கல்வி பயில இருக்கிற மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கியிருக்கிறார்.
சேர்க்கை ஆணைகளை வழங்குகிறபோதே, நேற்றைக்கு ஒரு திட்டத்தை அறிவித்தார். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பொறியியல், மீன்வளம், சட்டம் போன்ற பல்வேறு தொழிற்கல்வி பயில்கிற மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளித்து அரசுப் பள்ளியில் பயில்கிற மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர்.
தனியார் பள்ளிகளில் தொடக்கக்கல்வியைப் பயின்றாலும், நடுநிலைக் கல்வியை அரசுப் பள்ளிகளில் பயில்வதற்கு தனியார் பள்ளியில் பயில்கிற மாணவர்கள் திரளுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் நடவடிக்கையினால், எதிர்காலத்தில் அரசுப் பள்ளியில் சேர்வதற்கு பெரிய சிபாரிசுகள் தேவைப்படும் என்கிற நிலை ஏற்படவிருக்கிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படும். இந்த முயற்சிகள் மேற்கொண்டபிறகு அடுத்தத்தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுவதை தமிழக மாணவர்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டும், நீதிபதியின் சட்ட முன்வடிவை படித்துப் பார்க்கும்போது நிச்சயமாக இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.