நீண்டகாலக் கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று (செப். 21) நடைபெற்ற தொழில்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசியதாவது:
"தமிழக அரசின் தொழில்துறைக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. நம் அடிப்படை பலத்தைப் புரிந்துகொண்டு, நம்முடன் காலங்காலமாக இருக்கும் தொழிலதிபர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களை மேம்படுத்த வேண்டும். மற்றொன்று, புதிய தொழில்நுட்பங்கள், திறமைகளை அறிந்து புதிய வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்பது.
ஃபின்டெக் துறை புதிய வளர்ந்து வரும் துறை. அதனால், நுங்கம்பாக்கத்தில் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து ஃபின்டெக் சிட்டியை உருவாக்கி வருகிறோம். டேட்டா சென்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வருகின்றன. மற்ற மாவட்டங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தொழில்துறையைச் சார்ந்தவர்களின் கருத்துகளை அரசு கேட்கிறது. அவர்கள் சொல்வதை எடுத்துக்கொண்டு செயல்படுத்துவதில் முதல்வர் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். நீண்டகாலக் கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்".
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.