தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.21) நடைபெற்றது. கூட்டத்துக்குக் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார். இதில், தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, தேசியப் பொதுச் செயலாளர்கள் அப்துல் மஜீத், இலியாஸ் முகமது தும்பே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
’’வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27-ம் தேதி ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பது.
ஊழலில்லா உள்ளாட்சி அமையவும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படவும் தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது.
குடியுரிமை திருத்தச் சட்டம், நீட், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். அதேசமயம், இதைச் செயல்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக சட்டப் பேராட்டத்தையும் தமிழக அரசு நடத்த வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழக அரசு விரையில் வெளியிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள சுரங்கப் பாதைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு பதிலாக பாலம் அமைக்க வேண்டும்.
நாட்டில் அரசுப் பணிகள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலமாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாகவும் மாறி வருவதால் அரசுப் பணி அருகி வருகிறது.
எனவே, அரசுப் பணியில் உள்ளதைப் போன்று தனியார் பணியிலும் இட ஒதுக்கீட்டு முறையைக் கட்டாயமாக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்’’.
கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.