பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கோடநாடு எஸ்டேட் ஊழியர் மரணம்: தந்தை, சகோதரரிடம் விசாரணை

ஆர்.டி.சிவசங்கர்

கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராகப் பணியாற்றிய தினேஷின் தந்தை மற்றும் சகோதரரிடம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா காயமடைந்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட சயான், வாளையாறு மனோஜ், உதயன், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கனகராஜ் 2017 ஏப்.28-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உதகை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், அனைவரும் நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். தற்போது இந்த விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில், 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில், கடந்த ஆட்சியில் 41 நபர்கள் விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் விசாரிக்கப்படாத சாட்சிகளிடம் தனிப்படை அமைத்து பழைய காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோடநாடு சம்பவம் நடந்த அன்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பணியில் இருந்த காவலர்கள் யாரும் பணியில் இல்லை, சிசிடிவி கேமரா இயங்கவில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், மின்சார உதவிப் பொறியாளர் மற்றும் கைரேகை நிபுணர், மேலும் இது தொடர்பாக உள்ள அனைவரையும் விசாரிக்கின்றனர்.

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கை மறு விசாரணை செய்ய கோத்தகிரி வட்டாட்சியரிடம் சோலூர்மட்டம் போலீஸார் மனு அளித்துள்ளனர். கோடநாடு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலையில் மர்மம் இருப்பதாக ஏற்கெனவே புகார் எழுந்த நிலையில், தற்போது மறு விசாரணைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த நாளன்று எஸ்டேட் நுழைவுவாயிலில் சிசிடிவி கேமரா இல்லை, பிறகு அதே இடத்தில் சிசிடிவி கேமரா எப்படி வந்தது? இதுகுறித்து இதுவரை எந்தத் தகவலும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்போது இதுகுறித்து மறு விசாரணை செய்ய கோத்தகிரி வட்டாட்சியரிடம் சோலூர் மட்டம் போலீஸார் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (செப். 21) தினேஷ் தந்தை போஜன் மற்றும் சகோதரி ராதிகா ஆகியோரிடம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT