ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள 9 மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 33,971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்.6, 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதர மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
கடந்த 5 நாட்களாக குறைந்த அளவிலேயே வேட்புமனுக்கள் தாக்கலாகி வந்தன. இந் நிலையில், நேற்று ஒரே நாளில் 33,971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுவரை ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027, ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10,107, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 என மொத்தம் 53,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாளையுடன் நிறைவு
நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. 23-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற 25-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றே வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.