தமிழகம்

வறட்சி பகுதியில் சொட்டு நீர் பாசனத்தில் நெல் சாகுபடி: கொங்கல் நகர் கிராம விவசாயி சாதனை

எம்.நாகராஜன்

உடுமலை அருகே வறட்சி பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலமாக நெல் சாகுபடி செய்து, விவசாயி சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் வட்டாரம், வறட்சியான பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு பெரும்பாலும் பிஏபி பாசனத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மக்காச்சோளம், தென்னை, காய்கறி, கொண்டைக்கடலை, நிலக்கடலை உள்ளிட்ட பயறு வகை சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர் வளம் காரணமாக, அமராவதி ஆற்று பாசனமுள்ள கல்லாபுரம், குமரலிங்கம், கொழுமம், சங்கராமநல்லூர், மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிக அளவு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், குடிமங்கலம் பகுதிகளில் நெல் பயிரை நடவு செய்ய விவசாயிகள் யாரும் முன்வருவதில்லை.

இந்நிலையில், கொங்கல்நகரத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி, சொட்டு நீர் பாசனம் மூலமாக வறட்சி பகுதியிலும் நெல் சாகுபடி சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார். இதுகுறித்து ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியரும், விவசாயியுமான எஸ்.சின்னசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது: பாரம்பரியமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தொடக்கம் முதலே விவசாயத்தில் ஈடுபாடு அதிகம். முன்பெல்லாம் அதிக மழை இருந்ததால், நெல் உட்பட பல வகை பயிர்களை பெற்றோர் சாகுபடி செய்தனர். ஆனால், தற்போது எப்போதாவது கிடைக்கும் மழையால் விவசாயம் நசிந்து வருகிறது. கிணறு, போர்வெல் ஆகியவற்றை நம்பியே பாசனம் செய்ய வேண்டியுள்ளது.

வழக்கமான முறையில் நெல்லுக்கு அதிக நீர், ஆட்கள் தேவை. பராமரிப்பு செலவும் அதிகம். ஏக்கருக்கு நெல் நடவு செய்ய 22 ஆட்கள் தேவைப்படும். ஆனால், சொட்டு நீர் பாசனத்துக்கு மாறிய பின், 12 பேர் மட்டுமே தேவைப்பட்டனர். ஏறக்குறைய சம அளவில் மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பழைய முறையில் ஏக்கருக்கு பாய்ச்சிய நீரை, சொட்டு நீர் முறையில் 3 ஏக்கருக்கு பாய்ச்ச முடியும் என்பது சாத்தியமாகியுள்ளது. வருங்காலத்தின் நீரின் அவசியம் கருதி, இந்த முறையை கடைபிடித்தேன்.

110 நாட்களில் பலன் தரும் கோ-51 என்ற ரகத்தை ஒற்றை நடவு முறையில் சாகுபடி செய்துள்ளேன். ஏக்கருக்கு 3 டன் வரை மகசூல் கிடைக்கும். இத்தகைய முறையை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு உதவி செய்ய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறும்போது, “சொட்டு நீர் பாசனத்தில் நெல் சாகுபடி என்பது ஏற்கெனவே இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இதனை கடைபிடிக்கவில்லை. மாவட்டத்திலேயே இதனை பின்பற்றும் முன்னோடியாக விவசாயி சின்னசாமி உள்ளார்.

அறுவடையின்போது கிடைக்கும் மகசூல் குறித்து ஆய்வு செய்யவும், ஆர்வமுள்ள விவசாயிகள் இதே முறையை பின்பற்றவும் ஆலோசனை வழங்கி வருகிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT