தமிழகம்

வாக்குமூல நகலை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

வேலை வாங்கித்தருவதாகக் கூறிமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூல நகல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நேரில்ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள்மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூல நகல்களை செந்தில்பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிப்பதற்காக அனைவரும் ஆஜராக வேண்டும் என ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிபதி அலிசியா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் இருவரும் வரும் அக்.5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT