மெக்கானிக்கல், தாதுப்பொருட்கள் மற்றும் உற்பத்தி அமைப்பில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.
கல்லூரியின் மெக்கானிக்கல் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை செயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா நிறுவன இயக்குநர் (செயல்பாடுகள்) ஐசன் ஓவர் தொடங்கிவைத்தார். அவர் பேசும் போது, “கண்ணாடி தொழில்துறையில் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சவால் களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ப அனைவரும் தங்கள் அறிவு சார்ந்த திறமைகளை வளர்த் துக்கொள்ள வேண்டும். அத்துடன் அவற்றை சமுதாயத்துக்குப் பயன்படக் கூடிய பொருள்களாக மாற்றுவதும் அவசியம்” என்று குறிப்பிட்டார்.
சாய்ராம் கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, கருத்தரங்குக்கு தலைமை தாங்கிப் பேசுகையில், ஆராய்ச்சித்துறையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் இணைந்து செயல்பட இந்த கருத்தரங்கம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்றார். டெக்சிப் பிரான்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரஷீது ஷால்ஹி சிறப்புரையாற்றினார். மலேயா பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறை பேராசிரியர் நுக்மன் பின் யூசுப், தாதுபொருள் மற்றும் உற்பத்தி அமைப்புத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். 150 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தகமும் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
முன்னதாக, மாநாடு அமைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை டீன் ஏ.ராஜேந்திரபிரசாத் வரவேற்றார். மாநாடு அமைப்புத் தலைவர் சி.இளஞ்செழியன் அறிமுகவுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் சி.வி.ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினார். நிறைவாக, மாநாடு அமைப்பு துணைத்தலைவர் பி.விஜயராமநாத் நன்றி கூறினார். இந்த மாநாடு இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது.