தமிழகம்

பழங்குடியினரின் பணியிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்திய செவிலியர்

ஜோதி ரவிசுகுமார்

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள சாலை வசதி இல்லாத புல்லஹள்ளி மலைக்கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பழங்குடியினர் வேலை செய்யும் இடத்துக்கே, அவர்களைத் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சியில் செங்குத்தான மலை மீது புல்லஹள்ளி கிராமம் அமைந்துள்ளது. சாலை வசதி இல்லாத இந்த கிராமத்துக்கு கால்நடையாகத்தான் பயணிக்க வேண்டும். இந்த மலைக்கிராமத்தில் மருத்துவ வசதியின்றி 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புல்லஹள்ளி மலை கிராமத்தின் நிலையறிந்த தளி வட்டார மருத்துவ அலுவலர் ஷாலினி மேற்கொண்ட முயற்சியால் மருத்துவர் ஞானவேல், மருத்துவர் விக்னேஷ், ஆகியோர் தலைமையில் செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, புல்லஹள்ளி மலைக்கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த மருத்துவக் குழுவினர், புல்லஹள்ளி மலை கிராமத்துக்குக் கால்நடையாகச் சென்று அங்குள்ள மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்தும், மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே தேடிச்சென்றும், மலை கிராம மக்களைச் சந்தித்து அவர்களுக்கு கரோனா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாமில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் பங்கேற்று தொற்று நோய் பரவாமல் தடுப்பது குறித்து மலை கிராம மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த இலவச மருத்துவ முகாமில் அனைத்து மலைவாழ் மக்களுக்கும் பொது மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சையளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மலை கிராம மக்களுக்கு முகக்கவசம் மற்றும் நாப்கின்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT