புதுச்சேரியில் ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது தாயும் மாரடைப்பால் மரணமடைந்தார்.
புதுச்சேரி, சண்முகா புரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலு மகன் ஜீவா (25). இவர் நேற்று மாலை அரியாங்குப்பம் காசநோய் மருத்துவமனை எதிரே உள்ள ஆற்றில் தனது நணபர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார். அங்கு அவரது நண்பர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில், ஜீவா மட்டும் தனியாக ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அந்த இடம் சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
இதையறியாமல் ஜீவா நீரில் இறங்கியவுடன் மூழ்கிப் போனார். அவரது நண்பர்கள் உடனடியாக தவளக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரவு வரை தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
ஜீவா ஆற்றில் மூழ்கிய செய்தியைக் கேட்ட அவரது தாயார் முத்துலட்சுமி (50) வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இவருக்கு ஏற்கெனவே இதய நோய் இருந்தது. இதையடுத்து முத்து லட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் உடனடியாக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஜீவாவின் சடலம் அப்பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்துலட்சுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது உறவினர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.