தமிழகம்

ஆளுங்கட்சிக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி: வைகோ

செய்திப்பிரிவு

"தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்தியதற்கும், ஆளுங்கட்சியினர் எதேச்சதிகாரத்திற்கும், உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கின்றது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேரவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கதக்கதாகும். ஜனநாகயத்திற்கக் கிடைத்த வெற்றி ஆகும்.

சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்தியதற்கும், ஆளுங்கட்சியினர் எதேச்சதிகாரத்திற்கும், உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கின்றது.

கடந்த நான்கரை ஆண்டுக்காலமாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலைக் கடுமையாக ஒடுக்கி, ஆளுங்கட்சியினர் நடத்திய ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அணுகுமுறையே காரணம் ஆகும்.

தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் போன்று நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் மன்றமும் ஜெயலலிதாவுக்குத் தக்க தண்டனை வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT