மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

ஆளுங்கட்சி கூட்டணியில் மோதல்: புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்க திமுக திட்டம்?

செ. ஞானபிரகாஷ்

ஆளுங்கட்சி கூட்டணியில் மோதலால் புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்க திமுக திட்டமிட்டு, நட்சத்திர உணவகத்தில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

புதுவையில் மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கிறது. வரும் 22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, தங்கள் வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியிடம் அளித்தனர்.

ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிட வாய்ப்பே அதிகம் உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால், இதுவரை அதிகாரபூர்வ அறிவுப்பு வரவில்லை. அதே நேரத்தில், பாஜக தலைமையும் எம்.பி. சீட்டைப் பெற பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இதனிடையே, என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர், வேல்ஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் சந்தித்தார். அவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி, அரசியல் வட்டாரங்களில் கூறுகையில், "ஆளுங்கட்சிக் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்பட்சத்தில் இந்தக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார். இல்லாவிட்டால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டு ஆட்சிக்கே ஆபத்து ஏற்படலாம்" என்று குறிப்பிடுகின்றனர்.

ஆளுங்கட்சிக் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் ஏற்பட்டுள்ள மோதலைப் பயன்படுத்தி, திமுக களம் இறங்க திட்டமிட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். இன்று (செப். 19) பிற்பகலில் ஹோட்டல் அக்கார்டில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனையும் நடத்தினர். திமுக தலைமையின் அனுமதியுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக உயர் மட்டத்தில் விசாரித்தபோது, "புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக, திமுக தலா 6, சுயேச்சைகள் 6, காங்கிரஸ் 2 என, 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவை திமுக பெற்றால் 14 எம்எல்ஏக்கள் பலம் கிடைக்கும். ஆளும் கூட்டணியில் அதிருப்தியில் ஒரு சிலர் வாக்களிக்காவிட்டால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். இதனால் சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவைப் பெறவும் திமுக முயன்று வருகிறது" என்றும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே 2015-ம் ஆண்டு புதுவை மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெற ஜெகத்ரட்சகன் முயன்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் திமுக தரப்பில் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT