திமுக வேட்பாளர் நேர்காணல் சிறப்பாக நடக்கிறது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 22-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து, 2-வது நாளாக நேற்று முன்தினம் நடந்த நேர்காணலில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இந்நிலையில், 3-வது நாளாக நேற்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் நடந்தது. இதில் கருணாநிதியுடன் ஸ்டாலினும் பங்கேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறும்போது, ‘‘நேற்று (23-ம் தேதி) நடைபெற்ற நேர்காணலுக்கு நான் வராதது குறித்து சில நாளிதழ்களில் வேண்டுமென்றே தவறான செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள ‘முடியட்டும், விடியட்டும்’ விளம்பரங்கள் தொடரும். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களுக்கு அங்கேயே திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுக நேர்காணல் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது’’ என்றார்.