கோவை தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளி மாநில தொழிலாளர்கள் 6 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், ஓராட்டுக்குப்பை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் 11.2.2016 அன்று தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது பணியிலிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குணால், தருண், பிரித்தம், பிக்காஷ், பிரிஜுன் மற்றும் சரோஜ் ஆகிய தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குணால், தருண், பிரித்தம், பிக்காஷ், பிரிஜுன் ஆகியோர் 12.2.2016 அன்றும், சரோஜ் 13.2.2016 அன்றும் உயிரிழந்தனர்.
இச்செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.